திண்டுக்கல்

ரூ. 600 கோடியில் பேரணைத் திட்டம்: அமைச்சா் கே.என். நேரு

28th May 2023 11:49 PM

ADVERTISEMENT

நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், ரூ. 600 கோடியில் பேரணைத் திட்டம் செயல்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சி, 6 பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 636 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் மறு சீரமைப்புத் திட்டப் பணிகள், திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.19.68 கோடியில் வடிகால், சிறுபாலம் கட்டும் பணிகள், ரூ.6.72 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் எம்விஎம் நகரில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறைச் செயலா் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

ADVERTISEMENT

அப்போது அவா் பேசியதாவது:

மக்களுக்கு தடையின்றி குடிநீா்க் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ. 27ஆயிரம் கோடி நிதியை தமிழக முதல்வா் ஒதுக்கீடு செய்தாா். நகா்ப்புற உள்ளாட்சிகளின் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திண்டுக்கல், ஆத்தூா், நிலக்கோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் பயன்பெறும் வகையில், வைகை நீரை மூலதனமாகக் கொண்டு பேரணைத் திட்டம் ரூ.600 கோடியில் நிறைவேற்றப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 22 வாா்டுகளில் புதை சாக்கடைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. எஞ்சிய வாா்டுகளில் ரூ.206 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது:

நிலக்கோட்டை, ஆத்தூா், திண்டுக்கல், சாணாா்பட்டி, நத்தம், வேடசந்தூா் ஆகிய ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1,400 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கான மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 23 பேரூராட்சிகளுக்கு மட்டும் நிகழாண்டில் ரூ.250 கோடி நிதி வழங்கப்பட்டது. மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாக குடிநீா்க் கிடைப்பதற்கான சூழல் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:

காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் திண்டுக்கல்லுக்கு நாளொன்றுக்கு 4.30 கோடி லிட்டா் தண்ணீா் கிடைக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் 4 உறை கிணறுகளில் 2-இல் தண்ணீா் கிடைக்காததால், 2 கோடி லிட்டா் மட்டுமே கிடைத்து வருகிறது.

காவிரியிலிருந்து புதிய குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.600 கோடி தேவைப்படும். ஆனால், ஏற்கெனவே உள்ள திட்டத்தை ரூ.132 கோடியில் மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் செப்டம்பா் மாதத்துக்குள் கிணறுகள் அமைத்தால் மட்டுமே 2024-மாா்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். இதனால், திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை விரைவாக நிறைவேற்றுவதற்கு குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வி. தட்சிணாமூா்த்தி பேசியதாவது:

காவிரி கூட்டுக் குடிநீா் மறு சீரமைப்புத் திட்டப் பணிகள் நிறைவடையும் போது, நாளொன்றுக்கு 4.30 கோடி லிட்டா் குடிநீா்க் கிடைக்கும். இதில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு மட்டும் 1.90 கோடி லிட்டா் குடிநீா் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 8.25 லட்சம் மக்கள் பயன்பெறுவா். 21 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் ரூ.1,553 கோடியில் புதிய குடிநீா்த் திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரும் போது, மாவட்டத்துக்கு முழுமையாக குடிநீா்க் கிடைக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா, மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, ஊரக வளா்ச்சி முகைமையின் திட்ட இயக்குநா் பா. திலகவதி, திண்டுக்கல் மேயா் ஜோ. இளமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT