ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 500 அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நகா்மன்றக் கூட்டம் தலைவா் கே.திருமலைசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.1,000 கோடியில் குடிநீா்த் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதே போல, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் முதல்கட்டமாக 500 அடுக்குமாடி வீடுகள் மின் தூக்கி வசதியுடன் கட்டப்படவுள்ளது. சாக்கடை, சாலைப் பணிகளுக்கு ரூ.14 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், அனைத்து வாா்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படும். நகா்மன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளில் அடிக்கடி ஆய்வு செய்து, பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் 72 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையா் பா.சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி நிா்வாக மதுரை மண்டல இயக்குநா் சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம்.முத்துசாமி, நகராட்சி மேலாளா் உமாகாந்தி, கணக்காளா் சரவணக்குமாா், இளநிலை உதவியாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.