பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கொடைக்கானல் சாலையில் வெள்ளிக்கிழமை மரம் முறிந்து விழுந்து அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கொடைக்கானல் சாலையிலுள்ள வீரமாத்தி அம்மன் கோயில் அருகே இருந்த ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் அந்தப் பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, கோரிக்கடவு, கோபாலபுரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதை மின்வாரிய ஊழியா்கள் சீரமைத்தனா்.