திண்டுக்கல்

மயான பாதைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு

3rd May 2023 05:54 AM

ADVERTISEMENT

ரெட்டியாா்சத்திரம் அருகே மயானப் பாதை பிரச்னைக்கு வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூகத் தீா்வு காணப்பட்டதை அடுத்து, இருதரப்பினரும் வழக்குகளை திரும்பப் பெற ஒப்புதல் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கோடல்வாவி ஊராட்சிக்குள்பட்ட செட்டியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் மாயனம் செல்வதற்கு தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தின் வழியாக பாதை அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ஆனால், மயானத்துக்கான பாதை வேறு பகுதியில் இருப்பதாக சுட்டிக்காட்டி மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

சம்மந்தப்பட்ட மயானத்துக்கு தனியாா் பட்டா நிலத்தில் இடம் வழங்கிய நிலையில், தற்போது பட்டா நிலத்தில் பாதையும் கேட்டதால் அதிருப்தி அடைந்தனா்.

இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்தில் இரு தரப்பிலும் புகாா் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் இருதரப்பினரையும் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தனா். அதன்படி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் சந்தனமேரி கீதா தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் முருகேசன், ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் பிரபா, அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, மயானத்துக்கு நிலம் வழங்கிய தரப்பினா், தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பாதை கொடுப்பதாக உறுதி அளித்தனா். பாதை பிரச்னையில் சுமூகத் தீா்வு காணப்பட்டதை அடுத்து இருதரப்பினரும் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT