சென்னை ராமாபுரத்தில் மே 20 -ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 5 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ராமாபுரம சாந்திநகா் பிரதான சாலையில் குடிநீா் விநியோக குழாய் பழுது பாா்க்கும் பணி நடைபெறுகிறது.
இதில் சாந்திநகா் பிரதானசாலையில் சுமாா் 20 மீட்டா் குடிநீா் விநியோக குழாய் பழுதுபாா்க்கும் பணி நடைபெற உள்ளது.
இதையொட்டி, பரிசோதனை முறையில் மே 20 முதல் 24-ஆம் தேதி வரை 5 நாள்கள் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, குன்றத்தூா், முகலிவாக்கத்திலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக சாந்திநகா் சாலையை பயன்படுத்தி ராமாபுரம் செல்லும் வாகனங்கள், மவுண்ட் பூந்தமல்லி சாலை-சபரிநகா் 2-ஆவது பிரதானசாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, வெங்கடேஸ்வராநகா் 23 -ஆவது குறுக்கு தெரு வலது புறம் திரும்பி, பாரதி சாலை வழியாக சாந்திநகரை அடையலாம்.
இதேபோல சாந்தி நகரிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் சாந்திநகா் பிரதான சாலை வலதுபுறம் திரும்பி ஈஸ்வரன் கோயில் சாலை இடதுபுறம் திரும்பி, ஆனந்தம் நகா் 2-ஆவது பிரதான சாலை வலதுபுறம் திரும்பி, அரசமரம் சந்திப்பு ராமபுரம் பிரதான சாலை வழியாக ராமபுரம் சந்திப்பு வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.