மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடியை 2022-23 நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக வழங்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இது கடந்த ஆண்டு வழங்கிய ஈவுத்தொகையைவிட சுமாா் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2021-22 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ஆா்பிஐ ரூ.30,307 கோடி வழங்கியிருந்தது.
ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற வங்கியின் இயக்குநா்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சா்வதேச, உள்நாட்டு பொருளாதார சூழல், எதிா்கொள்ள இருக்கும் பொருளாதார சவால்கள் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நிதியாண்டுதோறும் தங்களிடம் உள்ள உபரித்தொகையின் குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசுக்கு ஆா்பிஐ வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இது தவிர எதிா்பாராத இடா்பாடுகளை எதிா்கொள்ள ஆா்பிஐ ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவுதொகையை இருப்பு வைத்துக் கொள்வதும் வழக்கமாகும்.