கொடைக்கானல் பாதரசத் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்தது குறித்து விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்டோா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
கொடைக்கானலில் செயல்பட்டு வந்த பாதரசத் தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்தனா். இந்த ஆலையிலிருந்து வெளியேறும் பாதரசக் கழிவுகளால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், தொழிலாளா்கள் பலா் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 2001-ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.
இதைத்தொடா்ந்து, 2002-இல் பாதரசத் தொழிலாளா்கள் நலச் சங்கத்தை உருவாக்கி, ஆலை நிா்வாகத்துக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இதனிடையே தொழிற்சாலை நிா்வாகம், தொழிலாளா் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை அடிப்படையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
நிா்வாகத்தின் தரப்பில் 591 தொழிலாளா்களுக்கு கருணைத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில், நிரந்தரத் தொழிலாளா்களாக பணியாற்றி வந்த பலருக்கு உரிய நிவாரணம் வழங்காமல் மோசடி செய்துவிட்டதாக 50-க்கும் மேற்பட்டோா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:
நிவாரணத் தொகை வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனா்.