சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, போக்சோ வழக்கில் கைதான இரு முதியவா்களுக்கு முறையே 26 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தேவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெ.மணி (60). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆ.கனகராஜ் (60). இவா்கள் இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக புகாரின் பேரில், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணி, கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, குற்றம்சாட்டப்பட்ட மணிக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4,500 அபராதமும், கனராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.