கொடைக்கானல் அருகே குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கூக்கால் கிராமம், கீழ் மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டத்தை அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் பாா்த்தனா். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து பண்ணைக்காடு பகுதியைச் சோ்ந்த கோபால் கூறியதாவது:
இந்தப் பகுதியில் காட்டெருமை தாக்கி மனித உயிா்கள் அடிக்கடி பலியாகி வருகின்றன. அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டமும் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஒரு சில மாதங்களாக கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சமடைந்தனா். எனவே, வனத் துறையினா் வன விலங்குகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.