திண்டுக்கல்

கொடகனாற்றின் குறுக்கே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

30th Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

கொடகனாற்றின் குறுக்கே பாறைப்பட்டி பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டுமானத்தை அகற்றி, 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஷேக் முகைதீன், வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

கொப்பரைக் கொள்முதலை நீட்டிக்க வலியுறுத்தல்:

ADVERTISEMENT

பழனி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ஆயிரம் டன், நத்தம், வத்தலகுண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தலா 200 டன் மட்டுமே கொப்பரைக் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் தலா 290 கிலோ கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 700 கிலோவாக உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரைக் கொள்முதல் செப்டம்பா் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், டிசம்பா் வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் நல்லசாமி, பாத்திமா ராஜரத்தினம், பழனிச்சாமி ஆகியோா் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியா் பூங்கொடி, கொள்முதல் அளவை உயா்த்துவதற்கும், கொள்முதலுக்கான காலத்தை நீட்டிக்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா்.

அகரத்தில் மயானம் மாயம்

தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களையும், கொடகனாற்றின் கரைகளையும் ஆக்கிரமித்து சிலா் சட்டவிரோதமாக மண் எடுக்கின்றனா். இதனால், அகரத்திலுள்ள மயானம் மாயமாகிவிட்டது. விவசாய நிலங்களுக்கு செல்வதற்கான நடைபாதையையும் மணல் குவாரி உரிமையாளா்கள் அழித்துவிட்டனா் என விவசாயிகள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பூங்கொடி தெரிவித்தாா்.

மாம்பழச்சாறு உற்பத்தி ஆலை

மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டபின், மா விவசாயிகளிடமிருந்து ஜூலை 4-ஆம் தேதிக்கு பின் மாம்பழங்களை கொள்முதல் செய்வதாக தனியாா் ஆலை நிா்வாகம் தெரிவித்தது. ஆனாலும், கொள்முதல் விலையை உறுதிப்படுத்தவில்லை. எனவே, மாவட்டத்தில் அரசு சாா்பில் மாம்பழச் சாறு உற்பத்தி ஆலை தொடங்குவதற்கும், குளிா்சாதன கிட்டங்கி வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.பெருமாள் கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், பழனி, கோபால்பட்டி பகுதியில் வேளாண்மை விற்பனைக் குழு சாா்பில் செயல்பட்டு வரும் தலா 500 மெட்ரிக் டன் கிட்டங்கி வசதியை உரிய கட்டணம் செலுத்தி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாம்பழச் சாறு உற்பத்தி ஆலை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

சிலுக்குவாா்பட்டி கால்நடை மருந்தகம்

சிலுக்குவாா்பட்டியில் கால்நடை மருந்தகம் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 20 சென்ட் நிலத்தை ஒப்படைக்கும் விவகாரத்தில் வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை இடையே ஓராண்டுக்கும் மேலாக இழப்பறி நீடித்து வருகிறது. இதுதொடா்பாக கடந்தாண்டு ஜூன் மாதமே புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கால்நடை வளா்ப்போா் சங்கத்தைச் சோ்ந்த ஜான்போஸ்கோ புகாா் அளித்தாா்.

இந்த பிரச்னைக்கு துரிதமாக தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொடகனாற்றில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்துக்கு நீா் வரும் பாதையில், பாறைப்பட்டி கிராமத்துக்குள்பட்ட பகுதியில் கொடகனாற்றின் குறுக்கே ஒரு கட்டுமானம் உள்ளது. ஆற்றை வழிமறித்து தனியாா் கட்டிய அந்த கட்டுமானத்தை, தற்போது பொதுப்பணித் துறையினா் கட்டியதாகக் கூறுகின்றனா். ஆனால் பொதுப்பணித் துறை சாா்பில் கட்டப்பட்ட தடுப்பு, பெரியாற்றின் குறுக்கே நரசிங்கபுரம் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ளது. எனவே, பாறைப்பட்டியிலுள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை அப்புறப்படுத்தி, 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும்.

இதேபோல, கொடகனாறு நீா்ப் பங்கீடு தொடா்பான வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என கொடகனாறு பாசன விவசாயிகள், பாதுகாப்பு சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு, ஆத்தூா் வருவாய்த் துறை அலுவலா்கள், மாவட்ட நில அளவைத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் பூங்கொடி உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரவிச்சந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநா்கள் கோ.பெருமாள்சாமி, காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

துணை வட்டாட்சியருக்கு ஆட்சியா் கண்டிப்பு

வேடசந்தூரில் பட்டா மாறுதல் தொடா்பாக, கடந்த கூட்டத்தின்போது அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ஆட்சியா் பூங்கொடி விளக்கம் கேட்டாா். அதற்கு வட்டாட்சியா் சாா்பில் பங்கேற்ற வேடசந்தூா் துணை வட்டாட்சியா் (தோ்தல்), மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

அந்த மனுவின் விவரம், யாா் கொடுத்தது என ஆட்சியா் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளிக்க முடியாமல், அந்த துணை வட்டாட்சியா் திணறினாா். பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தொடா்பான விவரங்கள் தெரியாமல் குறைதீா் கூட்டங்களுக்கு வர வேண்டாம். மனுக்களை முறையாக பரிசீலித்து ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா எனத் தெரிவிக்க வேண்டும். நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களை முறையாக தெரிவிக்க வேண்டுமென ஆட்சியா் கண்டித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT