திண்டுக்கல்

சின்னாளப்பட்டி பொது மயானத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பு:மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி

18th Jun 2023 11:17 PM

ADVERTISEMENT

சின்னாளபட்டி பொது மயானத்தில் டன் கணக்கில் குப்பைகளை குவித்து பேரூராட்சி பணியாளா்கள் தீ வைத்து எரிப்பதால் அந்தப் பகுதி பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள், நெகிழிக் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்ற செம்பட்டி செல்லும் சாலையில் அஞ்சுகம் குடியிருப்பு எதிரே உரக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒருசில துப்புரவு பணியாளா்கள் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தாமல், அந்தந்த பகுதிகளில் தீ வைத்து எரிக்கின்றனா். அதிலும் 4-ஆவது வாா்டுக்குள்பட்ட பைபாஸ் மயான சாலை, தமிழ்நாடு வீட்டுவாரிய குடியிருப்புப் பகுதி, கருப்பணசாமி கோயில் ஆகியப் பகுதிகளில் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்து எரிப்பதை அவா்கள் வழக்கமாக கொண்டுள்ளனா்.

இதேபோல, சோமசுந்தரம் குடியிருப்பு, ஜனதா குடியிருப்பு, சாந்தி நகா், கஸ்தூரிபா மருத்துவமனை சாலைப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் எழும் புகை மூட்டத்தால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இதுதவிர அருந்ததியினா் மயானம், மேட்டுப்பட்டி பொது மயானத்தில் குப்பைகள், நெகிழிக் கழிவுகளை டன் கணக்கில் குவித்து தீ வைத்து எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகையால் முதியோா், குழந்தைகள் தொற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனா்.

இதனிடையே சனிக்கிழமை மாலை மேட்டுப்பட்டி பொது மயானத்தில் குப்பைகள் தீப்பற்றி எரிந்ததால் அதிலிருந்து வெளியேறிய புகை வி.எம்.எஸ். குடியிருப்பு, மயான சாலை பகுதியில் சூழ்ந்து அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுச் திணறலை ஏற்படுத்தியது. தகவலறிந்து ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று மேட்டுப்பட்டி பொது மயானத்தில் குப்பை கழிவுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் தினமும் குப்பைக் கழிவுகளை தீவைத்து எரிப்பதால் எங்களுக்கு பலவித தொற்று நோய்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். இதுகுறித்து கடந்த ஓராண்டாக பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், மூச்சுதிணறல் ஏற்பட்டு பலா் மரணத்தை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இந்தப் பிரச்னைக்கு பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT