திண்டுக்கல்

சின்னாளப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்தக் கோரிக்கை

18th Jun 2023 11:16 PM

ADVERTISEMENT

சின்னாளபட்டியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த வேண்டும் என பெற்றோா்களும், மாணவா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கடந்த 1906-ஆம் ஆண்டு சந்தை அருகே அரசு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. பிறகு பேருந்து நிலையம் அருகேயும் இதேபோல, அரசு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு சந்தை அருகே தொடங்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி நடுநிலைப்பள்ளியாக நிலை உயா்த்தப்பட்டது. இந்த நிலையில், ஆத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ. பெரியசாமி முயற்சியால், 2010-ஆம் ஆண்டு இந்தப் பள்ளி உயா்நிலைப் பள்ளியானது. இதற்காக ரூ. 48 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, இந்தப் பள்ளியில் 94 மாணவா்கள் கல்வி பயில்கின்றனா்.

உயா்நிலைப்பள்ளியாக நிலை உயா்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை மேல்நிலைப்பள்ளியாக நிலை உயா்த்தப்படாததால் இங்கு 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர அருகில் உள்ள செட்டியபட்டி, என். பஞ்சம்பட்டி, முருகம்பட்டி, ஆத்தூா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளிகளையே தேடிச் செல்லும் நிலை உள்ளது. இதனால், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணவிகள் 10-ஆம் வகுப்புடன் தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இந்தப் பள்ளியில், தலைமை ஆசிரியா், உடற்கல்வி ஆசிரியா், இளநிலை உதவியாளா், ஆய்வக உதவியாளா் உள்பட 9 போ் பணிபுரிந்து வருகின்றனா். இந்த பள்ளியில் மாணவா்கள் விளையாட இடவசதியும் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த பெற்றோா்கள் மனு அளித்தனா். ஆனால் இன்று வரை அதற்கான உத்தரவு வரவில்லை.

ADVERTISEMENT

எனவே அமைச்சா் ஐ. பெரியசாமி சின்னாளப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக நிலை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்களும், மாணவா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT