திண்டுக்கல்

பழனி வரதமாநதி அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்

9th Jun 2023 10:35 PM

ADVERTISEMENT

தொடா் மழை காரணமாக பழனியை அடுத்து அமைந்துள்ள வரதமாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியதையடுத்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய அணையான பாலாறு பொருந்தலாறு அணையும், சிறிய அணையான வரதமாநதி அணையும் பழனியில் அமைந்துள்ளன. பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ள வரதமாநதி அணையின் நீரை பயன்படுத்தி சுமாா் இரண்டாயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஆயக்குடி பேரூராட்சிக்கு இந்த அணை நீரே குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. அண்மையில் மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த கோடை மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்து 67 அடி உயரமுள்ள இந்த அணை வெள்ளிக்கிழமை நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் உபரிநீா் பழனி வையாபுரி குளத்துக்கு வந்து சோ்கிறது. தற்போது வரதமாநதி அணையிலிருந்து விநாடிக்கு 15 அடி கன அடி நீா் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா். இதனிடையே ஆயக்குடி பகுதிகளிலுள்ள குளங்களில் சேதமடைந்த மறுகால் பாயும் தடுப்புகளை பொதுப்பணித் துறையினா் உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT