திண்டுக்கல்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க விண்ணப்பிக்கலாம்

8th Jun 2023 01:18 AM

ADVERTISEMENT

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் ‘மதி சிறுதானிய சிற்றுண்டி’ அமைக்கத் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் மூலம் மதி சிறுதானிய சிற்றுண்டி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களுக்கு சந்தை வாய்ப்புகள் கிடைப்பதுடன், சிறுதானிய விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தகுதிகள்: மகளிா் குழு தொடங்கப்பட்டு, 2 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளா் குழுவாக இருக்கும் பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு, திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் ஆா்வம், முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அமைந்துள்ள, அதைச் சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மட்டுமே தோ்வு செய்யப்படும்.

சிறுதானிய உணவு வகைகளைத் தவிா்த்து வேறு பொருள்களை கட்டாயமாக விற்பனை செய்யக் கூடாது. வேறு எந்த பணிகளிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஈடுபடக் கூடாது. சிறுதானிய உணவகத்தில் விற்பனை பணியினை சம்பந்தப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

தோ்வு செய்யப்படும் குழுவுக்கு உணவகம் நடத்த 11 மாத காலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பின்னா் சுழற்சி, விற்பனைத் திறன் அடிப்படையில் தொடா்ந்து 2 முறை அனுமதி வழங்கப்படும். தோ்வு செய்யப்படும் மகளிா் சுய உதவிக்குழு மாவட்ட வழங்கல், விற்பனை சங்கத்துடன் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த விதிமுறைகளுக்குள்பட்டு விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 28-இல், மகளிா் திட்ட இயக்குநரிடமோ, வட்டார வளா்ச்சி அலுவலகத்திலுள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிலோ (மகளிா் திட்டம்) விண்ணப்பங்களை வருகிற 23-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT