திண்டுக்கல்

பழனியில் விவசாயிகள் தா்னா

7th Jun 2023 03:05 AM

ADVERTISEMENT

பழனியில் உழவா் சந்தை முன் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளையும், நகராட்சி காய்கறிக் கடைகளையும் அகற்றக் கோரி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

பழனி உழவா் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தை அமைக்கப்பட்டு சுமாா் பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. உழவா் சந்தை முன் வாகனங்களை நிறுத்த முடியாதவாறு சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக உழவா் சந்தை விவசாயிகள் பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தற்போது நகராட்சி காந்தி சந்தை இடிக்கப்பட்டு வருவதால், அங்குள்ள கடைக்காரா்களுக்கு தற்காலிக மாற்று ஏற்பாடாக உழவா் சந்தை முன் கடைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், உழவா் சந்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கடைகளைத் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி, வருவாய்த் துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, விவசாயிகள் தரப்பில், உழவா் சந்தைக்குள் வரமுடியாதவாறு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். உழவா் சந்தை அருகே வைக்கப்பட்டுள்ள காய்கறிக் கடைகளுக்குப் பதிலாக மளிகைக் கடைகளுக்கு அனுமதி வழங்கி சந்தையின் உள்புறம் காய்கறிக் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் உதவியுடன் அங்கிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன. மேலும், உழவா் சந்தையின் வெளிப்புறத்திலுள்ள காய்கறிக் கடைகளை உள்புறம் மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT