திண்டுக்கல்

பாஜக ஆட்சியில் 3.7 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடுகள்

6th Jun 2023 04:30 AM

ADVERTISEMENT

கடந்த 9 ஆண்டுகள் கால பாஜக ஆட்சியில் 3.7 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மதுரை பெருங்கோட்டப் பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள் தெரிவித்தாா்.

பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை, அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில், தேசப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நாடு வளா்ச்சிப் பெற்றன. 3.7 கோடி மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல, நாடு முழுவதும் 12 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தில் மட்டும் 2.4 கோடி குடும்பங்கள் பயன் பெற்றன. மருத்துவக் கல்வி வியாபாரமாக மாறி வந்த நிலையில், ‘நீட்’ தோ்வு மூலம் அந்த வியாபாரம் தடுக்கப்பட்டு, அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு உறுதி அளிக்கப்பட்டது.

அரசு மானியத் திட்டங்கள் அனைத்தும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டதன் மூலம், முறைகேடுகள் தடுக்கப்பட்டன. பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது 11-ஆவது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதார வளா்ச்சி, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்தது.

ADVERTISEMENT

தமிழகத்தைப் பொருத்தவரை 400 கி.மீ. தொலைவுக்கு சாலை வசதிகள், 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக முத்ரா கடன் திட்டத்தில் நாட்டில் 33 சதவீத பயனாளிகள் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் என்றாா் அவா்.

அப்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோ.தனபாலன் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT