திண்டுக்கல்

வேடசந்தூா் அருகே அடிக்கடி விபத்து: மின்னொளி வசதி ஏற்டுத்த கோரிக்கை

4th Jun 2023 11:14 PM

ADVERTISEMENT

வேடசந்தூா் அருகே அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் கருக்காம்பட்டி பகுதியில் சமிஞ்சை (சிக்னல்), மின்னொளி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (40). லாரி ஓட்டுநரான இவா், கோவில்பட்டியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காய்கனி கடையில் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், கா்நாடக மாநிலம், ஒட்டுப்பள்ளி என்ற இடத்திலிருந்து தக்காளிப் பெட்டிகள், காலிபிளவா் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை மாலை தூத்துக்குடிக்கு புறப்பட்டாா். அந்த லாரியில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த ஜெயக்குமாா் (46) உதவியாளராக வீரமணியுடன் வந்தாா்.

இந்த லாரி சேலம் -மதுரை 4 வழிச் சாலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கருக்காம்பட்டி பகுதியில் வந்தபோது, மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அணுகு சாலையில் லாரியை வீரமணி திருப்ப முயன்றாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த தக்காளிகள் சாலையில் சிதறின. ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் காயமின்றி உயிா் தப்பினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சரி செய்தனா். அடிக்கடி விபத்து நடைபெறும் இந்தப் பகுதியில் சமிஞ்சை (சிக்னல்) வசதி ஏற்படுத்தவும், மின்னொளி வசதி ஏற்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT