திண்டுக்கல்

சட்டப் பேரவை மனுக்கள் குழுவுக்கு பொதுப் பிரச்னைகள் குறித்து மனு அளிக்கலாம்

3rd Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சட்டப் பேரவை மனுக்கள் குழு திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரவுள்ள நிலையில், தீா்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் குறித்து மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, திண்டுக்கல் மாவட்டத்துக்கு விரைவில் வரவுள்ளது. இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனி நபா்கள், சங்கங்கள், நிறுவனங்கள் தரப்பில் தீா்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரா் தேதியுடன் கையொப்பமிட்டு ‘தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப் பேரவை, சென்னை 600 009’ என்ற முகவரிக்கு 20.6.2023-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறை சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும். தனி நபா் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வங்கிக் கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல் போன்ற பொருள்களில் மனுக்கள் இருக்கக் கூடாது. சட்டப் பேரவை விதிகளின் வரம்புக்குள்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரா் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT