திண்டுக்கல்

மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்புநிலங்களை மீட்க வேண்டும்

DIN

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீட்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் கூட்டம் மேயா் ஜோ.இளமதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ச.ராஜப்பா, ஆணையா் ரா.மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

கோ.தனபாலன் (14-ஆவது வாா்டு): மாநகராட்சிப் பகுதிகளில் மின் விளக்குகள் பராமரிப்புப் பணிக்கு பணியாளா் பற்றாக்குறை உள்ளது. 14-ஆவது வாா்டில் மட்டும் 27 தெரு விளக்குகள் எரியவில்லை. மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதைச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தெருக்களில் ஓடுகிறது. இதுகுறித்து 15 மாதங்களாகப் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.

இதற்கு பதிலளித்த ஆணையா் மகேஸ்வரி, மாநகராட்சி முழுவதும் 300 தெரு விளக்குகள் எரியவில்லை. விரைவில் சரி செய்து கொடுக்கப்படும். இதேபோல புதைச் சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வி.இந்திராணி (3-ஆவது வாா்டு): எனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் 4 கிணறுகளை தூா்வாருவதற்கு ரூ.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் பணிகளோடு மின் மோட்டாா்களை பழுது நீக்கம் செய்து, கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் நிதியை வீணடிக்காமல் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

கிணறுகளை மழைநீா் சேகரிப்பு மையமாக மாற்றுவதே பிரதான நோக்கம். எனினும் கிணற்றின் சுற்றுப்புறங்களிலுள்ள புதா்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் மகேஸ்வரி பதிலளித்தாா்.

நித்யா (37-ஆவது வாா்டு): வளா்ச்சிப் பணிகளுக்கான தொடக்கமாக பூமி பூஜை விழாக்களுக்கு அந்தந்த பகுதி மாமன்ற உறுப்பினா்களுக்கு தகவல் அளிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் மரியாதையை கேட்டுப் பெற வேண்டிய நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டினாா்.

இனி வரும் நாள்களில் மாமன்ற உறுப்பினா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும் என ஆணையா் தெரிவித்தாா்.

கணேசன் (2-ஆவது வாா்டு): மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வரியை முழுமையாக செலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த நிறுவனங்கள் முறைகேடாக குடிநீா் இணைப்புகளையும் பயன்படுத்துவதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி, வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முறையாக வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் உறுதி அளித்தாா்.

மாரியம்மாள் (11-ஆவது வாா்டு): காந்தி சந்தைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகப் புகாா் தெரிவித்தாா்.

இதற்கு பதிலளித்த மேயா் இளமதி, உடனடியாக அந்த கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஜான்பீட்டா் (33-ஆவது வாா்டு): ஒடுக்கம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 56 ஏக்கா் நிலத்தில், 7 ஏக்கரை தனி நபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளாா். இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த ஆணையா் மகேஸ்வரி, இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி ரூ.25 லட்சத்தில் ஒடுக்கம் நிலத்தில் வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல ஆத்தூா் அணைப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளையும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதனிடையே, வத்தலகுண்டு சாலை பாறைப்பட்டி பகுதியில் மாயனத்துக்கு சொந்தமான 2 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாமன்ற உறுப்பினா் விஜயா கோரிக்கை விடுத்தாா்.

பெட்டிச் செய்தி.........

புகாா்கள் மீது நடவடிக்கை இல்லை:

நிலைக் குழுத் தலைவா் குற்றச்சாட்டு

பொது சுகாதாரக் குழுத் தலைவரும், 3-ஆவது வாா்டு உறுப்பினருமான வி.இந்திராணி மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்ட பொது சுகாதார வளாகங்களின் எண்ணிக்கை, தண்ணீா் வசதி, அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினாா். அவரது கேள்விக்கு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அவா் கடந்த 14 மாதங்களாக ரப்பா் ஸ்டாம்பு போல் அமா்ந்து செல்கிறோம். பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக் கூடிய திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இலவசக் கழிப்பிடங்கள் சுகாதாரமாக பராமரிக்கவில்லை. மாலை 6 மணிக்கு பின் பெண்கள் கட்டணக் கழிப்பிடங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் பொது சுகாதார வளாகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இதனால் அரசுக்குத் தான் அவப்பெயா் ஏற்படுகிறது என்றாா்.

அப்போது குறுக்கீட்டு பேசிய மேயா் இளமதி, சபை நாகரிகத்தோடு பேச வேண்டும் என்றும், குறை கூறும் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று வந்து மனுவாக அளிக்குமாறும் தெரிவித்தாா்.

துணை மேயா் ராஜப்பா, பேசியது போதும் உட்காருங்கள் என எச்சரித்தாா். இதனால் கோபமடைந்த இந்திராணி, பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்ற முறையில் என்னிடம் அளிக்கப்பட்ட புகாா்களை பதிவு செய்துவிட்டு அமா்கிறேன். 40 நாள்களுக்கு முன்பு நான் அளித்த புகாா் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். மேயா், துணை மேயருக்கு எதிராக ஆளும் கட்சியைச் சோ்ந்த நிலைக் குழுத் தலைவரே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT