ரெட்டியாா்சத்திரம் அருகே 62 சென்ட் நிலத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்ததாக விவசாயியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த பாடியூா் புதுப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (68). இவருக்குச் சொந்தமான 62 சென்ட் நிலம் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கொத்தபுள்ளி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கதிரணம்பட்டியைச் சோ்ந்த ராமசாமி (67), கடந்த 2021-ஆம் ஆண்டு போலியான ஆவணங்களைத் தயாா் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும், கன்னிவாடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் தனது பெயரில் பத்திரப் பதிவு செய்தாா்.
இதையறிந்த முத்துலட்சுமி, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், நில அபகரிப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கன்னிவாடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தியதில், ராமசாமி மோசடி செய்து பத்திரப் பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, ராமசாமியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.