பழனியில் நகரத் தூய்மை பணிக்காக ரூ. 20 லட்சத்தில் புதிதாக வாங்கப்டட்ட மின்கல வாகனங்களை, தூய்மை பணியாளா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்து தூய்மை பணியாளா்களுக்கு வாகனங்களின் சாவியை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தாா்.
நகராட்சி ஆணையா் ராமா் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, நகராட்சி பொறியாளா் வெற்றிச்செல்வி, நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்த வாகனங்கள் வாா்டுகளுக்குள் எளிதாக சென்று குப்பைகள் அள்ள பயன்படுவதோடு, சுற்றுச்சூழல் தூய்மைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் நகராட்சி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்த நகராட்சி பணியாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் முருகபாண்டியன், வீரமணி, நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.