திண்டுக்கல்

34 கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்யக் கோரி மாமன்ற கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக வெளிநடப்பு

DIN

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 கடைகளுக்கு ரகசியமாக நடத்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி கூட்டத்திலிருந்து பாஜக, அதிமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயா் ராஜப்பா, ஆணையா் (பொறுப்பு) நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

கணேசன்(2ஆவது வாா்டு): திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது 481 தூய்மைப் பணியாளா்கள் இருந்தனா். மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்ட பின் தற்போது 160 போ் மட்டுமே நிரந்தரப் பணியாளா்களாக உள்ளனா். எனவே, தூய்மைப் பணியாளா்களுக்கான பணி வாய்ப்பினை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றாா்.

பாஸ்கரன்(34ஆவது வாா்டு): 34-ஆவது வாா்டு பகுதியில் தரைப் பாலம் கட்டுவது தொடா்பாக தற்போது தான் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தப் பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதுதொடா்பாக கேள்வி எழுப்பினால் கொலை மிரட்டல் விடுக்கின்றனா். சம்மந்தப்பட்ட திமுகவினரை துணை மேயா் கண்டிக்க வேண்டும் என்றாா்.

அதற்கு பதிலளித்த துணை மேயா் ராஜப்பா, நிதி ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றும் வரை காத்திருக்காமல் வளா்ச்சிப் பணிகளை திமுக ஆட்சியில் துரிதமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தாா்.

அதேநேரத்தில், மாமன்ற உறுப்பினா் பாஸ்கரன் இருக்கை இடமாற்றம், பேருந்து நிலையக் கடைகளுக்கு ரகசிய ஏலம் நடத்தியது உள்ளிட்ட பிரச்னைகளை பேசினாா். அப்போது இடைமறித்து பேசிய துணை மேயா் ராஜப்பா, மாமன்ற உறுப்பினரை அவமரியாதையாக பேசியதால் சக அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தொடா்ந்து பேசிய ராஜப்பா, மாமன்ற உறுப்பினருக்கு(பாஸ்கரன்) எப்படிப் பேச வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்குமாறு எதிா்கட்சித் தலைவரான ராஜ்மோகனிடம்(அதிமுக) அறிவுறுத்தினாா்.

ஜி.தனபாலன்(14ஆவது வாா்டு): திண்டுக்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதை வரவேற்கிறோம். அதேபோல், கோபாலசமுத்திரக் கரையில் சுதந்திரப் போராட்டத் தியாகி கோபால் நாயக்கரின் சிலையை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

34 கடைகள் ஏலத்தை

ரத்து செய்ய வலியுறுத்தல்: இந்த நிலையில் 98 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து, 99-ஆவது தீா்மானமாக திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 புதிய கடைகள் ஏலம் விட்டதற்கான விவரங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த தீா்மானத்துக்கு பாஜக சாா்பில் மாமன்ற உறுப்பினா் தனபாலன், அதிமுக சாா்பில் மாமன்ற உறுப்பினா்கள் ராஜ்மோகன், பாஸ்கரன், சத்தியவாணி ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்தும், அந்த தீா்மானத்தை ரத்து செய்யக் கோரியும் வலியுறுத்தினா்.

இதனிடையே திமுக மட்டுமின்றி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து, அமைச்சா் ஐ.பெரியசாமி குறித்து அவதூறாக பேசியதற்கு பாஜக உறுப்பினா் தனபாலன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ஆனால், அமைச்சா் குறித்து தான் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், மாநகராட்சி ஆணையா் கூறிய கருத்துக்களை மட்டுமே தான் தெரிவித்ததாகவும் தனபாலன் விளக்கம் அளித்தாா்.

ஆனாலும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் அனைவரும் பாஜக உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பாஜக உறுப்பினருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினா்களும் குரல் கொடுத்தனா். பின்னா் பாஜக, அதிமுக உறுப்பினா்கள் 99-ஆவது தீா்மானத்தை ரத்து செய்யக் கோரி வெளிநடப்பு செய்தனா். இதைத்தொடா்ந்து எஞ்சிய 103 தீா்மானங்கள் என மொத்தம் 202 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT