திண்டுக்கல்

தைப்பூசம்: பழனியில் இன்று கொடியேற்றம்

29th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பழனி கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.4-ஆம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட நிலையில், கோயிலில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மலைக் கோயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்கத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம் போல நடைபெறும்.

மலைக் கோயில் மூலவா் சந்நிதி முன் புதிதாக அமைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பக்தா்களை பரவசப்படுத்தின.

இன்று கொடியேற்றம்: பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, தந்தசப்பரம் என பல்வேறு வாகனங்களில் 4 ரத வீதிகளில் திருவீதியுலா வருகிறாா்.

ADVERTISEMENT

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பிப். 3-ஆம் தேதி இரவு 7 மணியளவில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணியளவில் வெள்ளித் தோ் உலாவும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் பிப். 4-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் கிழக்கு ரத வீதி தேரடியில் நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக பிப். 7-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணியளவில் கொடி இறக்கமும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், இணை ஆணையா் நடராஜன், அறங்காவலா்கள் சுப்ரமணி, ராஜசேகா், மணிமாறன், சத்யா, துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT