திண்டுக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதனையொட்டி, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு மாவட்ட வன அலுவலா் எஸ்.பிரபு தலைமை வகித்தாா். வன விரிவாக்க அலுவலரும், பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளருமான டி.இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.
அய்யலூா் சரகத்தில் வேடசந்தூா், அழகாபுரி அணை, அய்யலூா் சமூக வனச் சரகத்தில் பாடியூா் குளம், ஒட்டன்சத்திரம் சரகத்தில் அன்னப்பபாச்சலூா் அணை, நல்லதங்காள் ஓடை, மாரியம்மன் கண்மாய், ஒட்டன்சத்திரம் சமூக வனச் சரகத்தில் இடைக்கோட்டை அம்பாசமுத்திர குளம், கன்னிவாடி சரகத்தில் செம்பட்டி கண்மாய், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், திண்டுக்கல் சரகத்தில் டேனரி கண்மாய், சீலப்பாடி கண்மாய், நந்தவனப்பட்டி கண்மாய், செட்டிநாயக்கன்பட்டி கண்மாய், திண்டுக்கல் சமூக வனச் சரகத்தில் அரண்மனைக் குளம், பெரியகோட்டை ஆணைக்குளம், அழகா்கோயில் சமூக வனச் சரகத்தில் பூலாங்குளம், சோ்வைக்காரன் குளம், நிலக்கோட்டை சமூக வனச் சரகத்தில் பிள்ளையாா்நத்தம் குளம், பழனி சமூக வனச் சரக்தத்தில் சத்திரப்பட்டி கருங்குளம், நத்தம் சமூக வனச் சரகத்தில் கேசரிகுளம் என 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.
பயிற்சி முகாமின் போது ஈரநிலங்களில் வாழும் பறவைகளை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள், வெளிநாட்டுப் பறவையினங்களைக் கண்டறிதல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில் வனச் சரக அலுவலா்கள் குமரேசன், எஸ்.சிவராமன், எம்.மனோரஞ்சிதம், கே.வெனிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி, காந்திகிராமிய பல்கலைக்கழகம், ஆா்.வி எஸ்.,பொறியியல் கல்லூரி, சமூக ஆா்வலா்கள என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.