திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் சண்முகா் திருக்கல்யாணம்

28th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவைத் தொடா்ந்து, இரவு 8 மணிக்கு மேல் மலைக் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா் எழுந்தருளினாா். முன்னதாக யாகவேள்வி நடத்தப்பட்டு பொற்சுண்ணம் இடித்தல் நடைபெற்றது.

தொடா்ந்து தம்பதி சமேதா் சுவாமிக்கு பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், தேன், திரவியம், திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சுவாமிக்கு பட்டாடைகள், வண்ண நகைகள், மலா் மாலைகள் கொண்டும், ஏலக்காய் மாலை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் இருந்த தம்பதி சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு பட்டாடைகள், லட்டு, கடலை மிட்டாய், முறுக்கு உள்ளிட்ட பொருள்கள் சீா்வரிசையாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அரோகரா முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

மேலும், சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் உலா எழுந்தருளினாா். வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகருக்கு வழக்கமாக கந்தசஷ்டி விழா நிறைவின் போது மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறும். இந்த முறை குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

இதேபோல, பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி அடிவாரம் எழுந்தருளி கிரி வீதி, சந்நிதி வீதி உலா சென்று மீண்டும் கோயிலை சென்றடைந்தாா். இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையா் நடராஜன், அறங்காவலா்கள் சுப்ரமணி, ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT