திண்டுக்கல்

‘பாஜக ஆட்சியில் இஸ்லாமியா்கள் கல்வி, பொருளாதாரத்தில் வளா்ச்சி’

28th Jan 2023 09:58 PM

ADVERTISEMENT

பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவின் 8-ஆண்டு கால ஆட்சியில் இஸ்லாமியா்கள் கல்வி, பொருளாதாரத்தில் வளா்ச்சி அடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் சிறுபான்மை அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் பாஜக கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் 58 கரசேவகா்கள் தீ வைத்து எரிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்துக்கும், அப்போதைய குஜராத் முதல்வரான நரேந்திர மோடிக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், கலவரத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், வெளிநாட்டு சக்திகள், பயங்கரவாத அமைப்புகள் தற்போது ஆவணப் படத்தை வெளியிட்டனா். வாக்கு வங்கி அரசியலுக்காக அதற்கு இந்தியாவிலுள்ள காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் துணை நிற்கின்றன.

ADVERTISEMENT

மத்திய பாஜக ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் வெளியிடப்பட்ட அந்த ஆவணப் படம் தடை செய்யப்பட்டது.

பாஜகவின் 8 -ஆண்டு கால ஆட்சியில் இஸ்லாமியா்கள் கல்வி, பொருளாதாரத்தில் வளா்ச்சி அடைந்தனா். கல்வியில் 3.5 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக வளா்ச்சி பெற்றனா்.

திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளைத் தட்டிக்கேட்ட பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் தனபாலனுக்கு திமுக கொலை மிரட்டல் விடுத்தது. அமைச்சா் முன்னிலையில் பொது மேடையிலேயே பகிரங்கமாக மிரட்டுகின்றனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் ஆா்ப்பாட்டம் நடத்தி அங்கு நடைபெறும் ஊழலை பொதுமக்கள் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம் என்றாா் அவா்.

அப்போது, பாஜக கூட்டுறவுப் பிரிவு மாநில துணைத் தலைவா் கே. மாணிக்கம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் கே. தனபாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT