கொடைக்கானலில் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகளால் சனிக்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புத்தாண்டையொட்டி, கொடைக்கானலில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பின.
தங்குவதற்கு இடமில்லாமல் சுற்றுலாப் பயணிகள் கடுமையான குளிரையும் பொருள்படுத்தாமல் சாலைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தஞ்சமடைந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் லாஸ்காட் சாலை, அப்சா்வேட்டரி, செவண்ரோடு, உட்வில்ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், காமராஜா் சாலை, ஏரிச்சாலை, டிப்போ பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் கடுமையான நெரிசலில் சிக்கியதால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் வாகனங்களிலேயே தவித்தனா்.
காவல்துறையினா் கட்டுப்பாடு: கொடைக்கானலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு ஏரிச் சாலைப் பகுதியில் சனிக்கிமை இரவு 7-மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7-மணி வரை சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏரிச் சாலைக்குச் செல்ல முடியாதபடி கலையரங்கம் பகுதியில் போலீஸாா் தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மது அருந்திவிட்டோ, பொது மக்களுக்கு இடையூறாகவோ இரு சக்கர வாகனங்களில் சென்றவா்களை காவல் துறையினா் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனா்.
நள்ளிரவில் தேவாலயங்களில் ஜெபவழிபாடு, சிறப்புத் திருப்பலி நடைபெற்ால் தேவாலயங்கள், முக்கிய இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.