ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அறுபடை வீடுகளான பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிா்ச்சோலை ஆகிய முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
பழனி: தமிழகத்தின் முதன்மைக் கோயிலாக திகழும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத் தாண்டு பிறப்பையொட்டி,பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அடிவாரம் பகுதியில் ஏராளமான பக்தா்கள் மயில் காவடி, பால் காவடி, மலா் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
புத்தாண்டையொட்டி, அதிகாலை 4 மணிக்கே சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
ரூ. 200, ரூ. 20 கட்டணத் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 4 மணி நேரமானது.
பழனி கோயில் சாா்பில், சுவாமி படம் அச்சிடப்பட்ட நாள்காட்டிகள் வெளியிடப்பட்டது. ஈரோடு தண்டபாணி ஸ்டீல்ஸ் செந்தில் முருகன் காணிக்கையாக வழங்கிய இந்த நாள்காட்டிகள் விற்பனையை, இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ் ஆகியோா் தொடக்கி வைத்தனா். இதை பக்தா்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோயில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மேலும், மூலஸ்தானத்தில் உள்ள சத்தியகிரீசுவரா், கற்பக விநாயகா், துா்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கிரிவலமாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.
பழமுதிா்ச்சோலை: இதேபோல, அழகா்கோவில் பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.