பழனி அடிவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அலகு குத்தி வந்த பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் திண்டாடியது பக்தா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
பழனி மலை முருகன் கோயிலுக்கு காா்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரத் தொடங்கினா். தற்போது தைப்பூசம், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு, கும்பாபிஷேகம் என தொடா் திருவிழாக்கள் வரும் நிலையில் பழனி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனா்.
பழனியில் சன்னிதி சாலை, கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு இடையே கிரிவலம் வரும் பக்தா்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மதுரை கோச்சடை பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட பாத யாத்திரை பக்தா்கள் வந்தனா். இவா்களில் 40-க்கும் மேற்பட்டோா் எட்டு அடி நீள அலகு குத்தி வந்து நோ்ச்சை செலுத்தினா். சுமாா் 30 அடி அகலமுள்ள கிரிவீதி, சன்னதி வீதி இரண்டுமே ஆக்கிரமிப்புகள் தற்போது ஆறு அடி குறுகிய சந்து போல மாறியது. இந்த பாதையை அலகு குத்தி வந்த பக்தா்கள் மிகுந்த சிரமத்துடன் கடக்க நேரிட்டது.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு நகராட்சி நிா்வாகம் சாா்பில், இப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. ஆனால், அது முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். எனவே, இனிவரும் காலங்களிலாவது அதிகாரிகள் கிரிவலப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.