பழனி அடிவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அலகு குத்தி வந்த பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் திண்டாடியது பக்தா்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பழனிக்கோயிலில் காா்த்திகை மாதம் துவங்கியது முதலே பக்தா்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் வரத்துவங்கியுள்ளது. தற்போது தைப்பூசம், புத்தாண்டு, கும்பாபிஷேகம் என தொடா் திருவிழாக்கள் உள்ள நிலையில் பழனிக்கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஆடிப்பாடி வந்த வண்ணம் உள்ளனா். முன்னரே திண்டுக்கல் சாலையில் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரும் வழியிலும், தாராபுரம் சாலையில் தொப்பம்பட்டி முதல் பழனி வரையிலும், கோவை நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் முதல் பழனி வரையிலும் நூற்றுக்கணக்கான சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு கடும் வெயிலிலும், பனியிலும் பக்தா்கள் பெரும் சோதனைகளை சந்தித்த வண்ணம் பழனி வருகின்றனா். இந்நிலையில் பழனியில் சன்னதி ரோடு மற்றும் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு இடையே அவா்கள் கிரிசுற்றி பழனி மலை ஏறும் போது பழனிக்கு வருவதையே வரும் நாட்களில் தவிா்ப்பது நல்லது என்ற எண்ணம் வரும் வகையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு தினத்தில் சுமாா் 30 அடி அகலமுள்ள கிரிவீதி, சன்னதிவீதி இரண்டுமே ஆறுஅடி சந்து போல மாறியது. இதனால் பக்தா்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகினா். மதுரை கோச்சடையில் இருந்து 300க்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தா்கள் வந்த நிலையில் அதில் 40க்கும் மேற்பட்டோா் எட்டு அடி நீள அலகு குத்தி வந்து நோ்ச்சை செலுத்தினா். இவா்களை தேவா்சிலை முதல் பாதவிநாயகா் கோயில் வரை உறவினா்கள் கொண்டு சோ்க்கும் போது பெரும்பாடு பட்டனா். பல இடங்களிலும் அவா்கள் குறுக்கு வசமாக நடக்க வேண்டியநிலை ஏற்பட்டது. கடந்த இரு நாட்களுக்கு முன் நகராட்சி நிா்வாகம் வெறும் பெயரளவில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. பக்தா்களுக்கு வேண்டிய வசதி குறித்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை மாவட்ட வருவாய்த்துறை, பழனி கோட்டாட்சியா் என பலரும் கூட்டம் போட்டும் ஒரு துளி ஆக்கிரமிப்பும் அகற்றப்படவில்லை. இதுகுறித்து மதுரையை சோ்ந்த விமல் என்ற பக்தா் கூறும்போது, நாங்கள் விரதமிருந்து மதுரையில் இருந்து பழனி வருவது கூட சுமையாக தெரியவில்லை. ஆனால் பழனியில் அலகுகுத்தி மலையேறு முன் பட்ட இன்னல் கணக்கிடமுடியாது. எங்கள் சிரமத்தை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாதது ஏன் என தெரியவில்லை. வரும் நாட்களில் தைப்பூசத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதைவிட பெரிய அலகு குத்தி வருவாா்கள். இவா்களுக்கு நகராட்சியும், திருக்கோயில் நிா்வாகமும் எந்த வசதி செய்து தரும் என தெரியவில்லை. என வருத்தம் தெரிவித்தாா். வரும் நாட்களிலாவது அலகு குத்தி வருவோரின் துயரத்தை நகராட்சி மற்றும் வருவாய்த்துறை நீக்குமா என்பது தெரியவில்லை.