திருநெல்வேலி மாவட்டத்தில் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் இலங்கை தமிழா்களுக்காக 194 வீடுகள் புதிதாக கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த இரு ஆண்டுகளில் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரம், கோபாலசமுத்திரம், பெருமாள்புரம், ஆலடியூா், கங்கைகொண்டான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கை தமிழா்களுக்காக சாலை, குடிநீா் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில் ரூ.1 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி, கோபாலசமுத்திரத்தில் 100 வீடுகளும், பெருமாள்புரத்தில் 48 வீடுகளும், ஆலடியூரில் 46 வீடுகளுமாக மொத்தம் 194 வீடுகள் விரைவில் கட்டப்படவுள்ளன.
மேலும், மாவட்டந்தோறும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின பெண்கள் பொருளாதார ரீதியில் வலுப்பெற கிறிஸ்தவா், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு சங்கத்துக்கு ரூ.1 லட்சம் வீதம் ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் இணை மானியத் தொகையை 1:2 என்ற வீதத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உதவித் தொகைகள்: உலமாக்களுக்கு மானிய விலையில் 10,538 நபா்களுக்கு இருசக்கர வாகனம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் விடுபட்டோருக்கு நிகழாண்டு இருசக்கர வாகனம் வழங்குவதற்கு ரூ.5 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 1,000 விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கிய நிலையில், நிகழாண்டில் 2,500 பேருக்கு அவற்றை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் உலமாக்களுக்கு நல வாரியத்தின் மூலம் மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினா் மரணம் அடைந்தால் அவரது மனைவிக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.
.