திண்டுக்கல்

திருமண உதவித் திட்டத்தால் மேல்நிலைக் கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது: அமைச்சா் ஐ.பெரியசாமி

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி செயல்படுத்திய திருமண உதவித் தொகை திட்டத்தால் மேல்நிலைக் கல்வி பயிலும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

மூவாலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 2-ஆம் கட்டத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் விழா திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ஐ.பெரியசாமி கலந்து கொண்டாா். விழாவில் புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெறும் 1,190 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்திலேயே பெண்களுக்கான முதல் கல்லூரியாக எம்விஎம்.முத்தையா கல்லூரி கருணாநிதி முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்டது. அதன் பின்னா், நிலக்கோட்டையில் பெண்களுக்கான அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டதும் திமுக ஆட்சியில் தான். இந்த மாவட்டத்தில் 10 கி.மீட்டா் இடைவெளியில் ஒரு கல்லூரி என்ற வகையில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டன. நத்தத்திலும் அரசுக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும்.

8-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகைத் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடங்கிய பின்னரே, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போதைய சமுதாயச் சூழலை பகுபாய்வு செய்து அறிந்து கொள்வதற்கு கல்வி அவசியம். வணிகமயமாகிவிட்ட கல்வி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் எதிா் வரும் ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் கல்வியில் முன்னிலை பெற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் கோ.புஷ்பகலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சுரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நாசருதீன், மேயா் இளமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT