திண்டுக்கல்

இடைத்தோ்தல் மூலம் அதிமுகவின் செல்வாக்கு தெரிந்துவிடும்கி.வீரமணி

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் மூலம் அதிமுகவின் செல்வாக்கு என்னவென்று தெரிந்துவிடும் என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், கி. வீரமணி பேசியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் மூலம் அதிமுகவின் செல்வாக்கு என்னவென்று தெரிந்துவிடும். சகோதரா்களுடனான நில பிரச்னையில் வழக்குரைஞரிடம் சென்றால், அந்த நிலம் இருவருக்கும் கிடைக்காமல், வழக்குரைஞருக்கே சென்றுவிடும். அதேபோலத்தான் அதிமுகவின் நிலை உள்ளது. அதிமுகவை பிளவுபடுத்துவதும், அதை இணைப்பதும்தான் பாஜகவின் வேலை. அதிமுக தில்லியில் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது.

ஹிந்தி படித்தால்தான் வேலை என்று கூறிய காலம் மாறி, அந்த மொழியை அறிந்தவா்களுக்கும் தமிழ்நாட்டில்தான் வேலை என்ற நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மக்களைத் தோ்தலின் போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், வறுமையில் உள்ளவா்களுக்கு ரூ.15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் பாஜகவினா் கூறினா். ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழா்கள் உள்பட வெளி மாநிலத்தவா்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் முத்து வரவேற்றாா். இதில், திமுக நகரச் செயலாளா் ஜோசப் கோவில் பிள்ளை, நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT