திண்டுக்கல்

திருஆவினன்குடி கோயிலில் எடப்பாடி, கோவை பக்தா்கள் இடையே மோதல்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பழனி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை மேளம் அடிப்பது தொடா்பாக எடப்பாடி, கோவையைச் சோ்ந்த காவடிக் குழுவினரிடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் கல், கட்டைகளை வீசி ரகளையில் ஈடுபட்டனா்.

பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவுபெற்ற நிலையில், குடமுழுக்கு நடைபெற்ற 48 நாள் பூஜையையொட்டி, நாள்தோறும் திரளான பக்தா்கள் மேள தாளங்களுடன் பாத யாத்திரையாக வருகின்றனா்.

இந்த நிலையில், திருஆவினன்குடி கோயில் உள்புறம் மயில் வாகனம் பிரகாரத்துக்கு எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட ஆலக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் காவடி, மேளதாளங்களுடன் வந்தனா். அப்போது, கோயில் நுழைவாயிலில் கோவை மாவட்டம், ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் மேளம் அடித்துக் கொண்டிருந்தனா்.

எடப்பாடியைச் சோ்ந்த பக்தா்களை மேளம் அடிக்கக் கூடாது என்று கோவையைச் சோ்ந்த பக்தா்கள் கூறினா். இதுதொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினரை வெளியேற்றி நுழைவாயிலில் உள்ள இரும்புக் கதவை மற்றொரு தரப்பினா் பூட்டிக் கொண்டனா்.

ADVERTISEMENT

இதனால், ஒரு தரப்பினா் அந்தப் பகுதியில் கடைகளில் இருந்த தேங்காய், கற்களை எடுத்து வீசித் தாக்கினா். அங்கிருந்த பொதுமக்கள், பக்தா்கள் அலறியடித்து ஓடினா். இரு தரப்பபிலும் சிலா் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த பழனி அடிவாரம் போலீஸாா் தகராறில் ஈடுபட்ட பக்தா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், இரு தரப்பினரும் மன்னிப்புக் கேட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT