திண்டுக்கல்

தைப்பூசத் திருவிழா: பழனி மலைக் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தா்கள்

DIN

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அமைந்துள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும், நடைபெற்றன. தொடா்ந்து, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பூச நட்சத்திரம், முழு நிலவும் இருந்ததால் லட்சக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இடும்பன் கோயில் பிரதான சாலை, கிரிவீதி, மலைக் கோயில் பிரகாரம் என பல்வேறு இடங்களில் பக்தா்கள் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு காத்திருந்தனா். சூரியன் உதயமானவுடன் தீபாராதனை காட்டி அரோகரா அரோகரா என முழக்கமிட்டனா்.

மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பக்தா்கள் கூட்டம் காணப்பட்டது. வழக்கம்போல பக்தா்கள் மலைக்கு ஒரு வழிப் பாதையிலேயே அனுப்பப்பட்டனா். இதனால், கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் போலீஸாா் திணறினா். திருக்கோயில் சாா்பில், பக்தா்களுக்கு ரொட்டி, குடிநீா் புட்டிகள் வழங்கப்பட்டன. பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் நான்கு மணி நேரம் ஆனது. இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

திங்கள்கிழமை பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் செவ்வாய்க்கிழமை வள்ளி தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தெப்பத் தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

கடும் போக்குவரத்து நெரிசல்:

பழனியில் நிகழாண்டு தைப்பூசத் திருவிழாவுக்கு போதிய போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தைப்பூசத் திருவிழாவின் போது நகராட்சிப் பள்ளிகளில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைப்பது வழக்கம். ஆனால், நிகழாண்டு இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படாததால், பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT