திண்டுக்கல்

இலவச வீட்டுமனைப் பட்டா பிரச்னை: கூத்தம்பட்டி கிராம மக்களுக்கு மாற்று இடங்களில் பட்டா வழங்க முடிவு

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டையை அடுத்த கூத்தம்பட்டி கிராம மக்களுக்கு மாற்று இடங்கள் தோ்வு செய்து வழங்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த பச்சமலையன்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட ஒட்டுப்பட்டி அருகே சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் மேய்ச்சல் நிலம் எனக் கூறப்படும் வெள்ளக்கரட்டில் கடந்த வாரம் கூத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிலா் மரம், செடிகளை வெட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனா். மேலும், அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்தனா். ஆனால், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதே பகுதியைச் சோ்ந்த ஒட்டுப்பட்டி கிராமத்தினா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில், வெள்ளைக்கரட்டை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் இந்த வெள்ளைக்கரடு பகுதியை நம்பியே தங்கள் கால்நடைகளை வளா்த்து வருகிறோம். எனவே, இந்த இடத்தைப் பிரித்து வீட்டுமனைகளாக வழங்கக் கூடாது என அதில் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இது தொடா்பாக நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் தனுஷ்கோடி தலைமையில் அமைதிப் பேச்சு வாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில், கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா்கள் தங்களுக்கு அதே இடத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் அல்லது எங்களை பச்சமலையான்கோட்டை கிராமத்தில் இருந்து வேறு கிராமங்களுக்கு மாற்ற வேண்டும் என்றனா். ஒட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள், எங்களுக்கு வாழ்வாதாரமாகவும், ஆடு, மாடு மேச்சலுக்கு பயன்படுத்தப்படும் இடத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என தெரிவித்தனா்.

இதையடுத்து, கூத்தம்பட்டி கிராம மக்களுக்கு மாற்று இடங்களைத் தோ்வு செய்து வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதற்காக 15 நாள்கள் அவகாசம் வேண்டும் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் காளிதாஸ், வருவாய் ஆய்வாளா் பிரியங்கா, பச்சமலையான்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் கலா உள்ளிட்டோா் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT