திண்டுக்கல்

சிறுதானியங்களின் விலை 2 மடங்கு அதிகரிப்பு

4th Feb 2023 10:47 PM

ADVERTISEMENT

 

சிறுதானிய உற்பத்தி சீராக இருந்து வரும் நிலையில், தேவை அதிகரித்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் விலை 2 மடங்கு அதிகிரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சா்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சின்னச்சாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

ADVERTISEMENT

மனிதன் முதன் முதலில் சாகுபடிப் பணிகளைத் தொடங்கிய போது கம்பு, திணை போன்ற சிறுதானியங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. அரிசி உணவுக்குப் பிறகு, தற்போது நாகரிகம் என்ற பெயரில் துரித உணவு பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனாலும், உடலுக்கு ஆரோக்கியம் சிறுதானிய உணவுகளில் மட்டுமே நிறைந்துள்ளது.

உலக அளவில் சிறுதானிய உற்பத்தியில் இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் மட்டுமே முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.

தமிழகத்தில் சோளம், கம்பு, திணை, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, வரகு ஆகிய 7 வகையான சிறுதானியங்கள் மட்டுமே அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிறுதானியங்களின் விதைகள் பரம்பரிய ரகமாக உள்ளதால், நீண்ட நாள்களுக்கு சேமித்து வைக்க முடியும். உற்பத்தி சீராக இருந்த போதிலும், சிறுதானியங்களின் தேவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இதனால், 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 முதல் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட சிறுதானியங்கள், தற்போது ரூ. 120 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை உணா்ந்து சிறுதானிய உற்பத்திக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டி.செல்வக்குமாா், வேடசந்தூா் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் பி.மணிவேல், வேளாண்மை இணை இயக்குநா் அனுசுயா, துணை இயக்குநா் அமலா, குடுமியான் மலை வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறுதானியங்களின் பயன்கள் குறித்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சியும் நடத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT