திண்டுக்கல்

தாய் மொழியில் மட்டுமே கருத்துகளை உணா்வுப்பூா்வமாக பதிவு செய்லாம்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தாய் மொழியில் மட்டுமே கருத்துக்களை உணா்வுப்பூா்வமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்ய முடியும் என மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்க நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இன்றைக்கு தாய் மொழியான தமிழில் பேசுவதற்கு சிலா் தயக்கம் காட்டுகின்றனா். தாய் மொழியில் பேசினால் மட்டுமே, நம்முடைய கருத்துகளை அழுத்தமாகவும் உணா்வுப் பூா்வமாகவும் பதிவு செய்ய முடியும். தமிழில் பிழையின்றி எழுத முடியாத ஊழியா்கள் அவமானப்பட வேண்டும்.

ADVERTISEMENT

மொழியை விலை மதிப்பற்ற சொத்தாக கருதி, பாதுகாக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் வரைவுகளை ஆங்கிலத்தில் தவறுதலாக எழுதுவதைவிட, தமிழில் பிழையின்றி சரியாக எழுதுவததே சிறப்பாக அமையும்.

பாரதியாா், பாரதிதாசன் கவிதைகளை வாசிக்கும்போது ரத்தம் சூடேறும். அந்த உணா்வை குழந்தைகளுக்கும் ஊட்ட வேண்டும். மொழி மீதான பற்று வீட்டிலிருந்து தொடங்கி அலுவலகம் வரை வளர வேண்டும்.

நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தீா்ப்பாணைகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், சேலத்தில் நில எடுப்புக்கான மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்தபோது முதல் முறையாக தமிழில் தீா்ப்பாணைக்கான பரிந்துரைகளை வழங்கினோம். அதனைப் பின்பற்றி அனைத்து தீா்ப்பாணைகளும் தற்போது தமிழில் வெளியிடப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா் அவா்.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குநா்(பொ) பெ.சந்திரா பேசியதாவது:

பிற மொழிச் சொற்கள் கலப்பதால், தமிழில் உள்ள மூலச் சொற்கள் அழிந்து வருகின்றன. பலகணி, சாளரம், வளிவாய், காற்று வாரி, காலதா் என 5 தமிழ் சொற்களை ஜன்னல் என்ற ஒரு போா்ச்சுகீசிய சொல் அழித்துவிட்டது. இதேபோல் ஏராளமான சொற்கள் தமிழில் மறைந்து வருகின்றன. பண்பாடு, கலாசாரம் மட்டுமின்றி மொழியும் அழிந்தால், ஒரு இனம் அழிந்துவிடும். ஊராட்சி மன்றம் முதல் தலைமைச் செயலகம் வரை நிா்வாகம் என்பது தமிழ் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

ஆட்சிமொழி

பயிலரங்கில் ஆங்கிலம்

தமிழில் தவறாக எழுதுவதையும், கையொப்பமிடும்போது முதல் எழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பதையும் மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா கடுமையாக விமா்சித்தாா். ஆனால், அவரது தொடக்கவுரையில் ஸோ, ஃபீலிங்கஸ், கலெக்டா், லைஃப், பட்டிக்குலா்ஸ், நாவல், டவுட், மேன் பவா் உள்ளிட்ட பல ஆங்கில சொற்களை கலந்து பேசியது அரசுப் பணியாளா்கள் மத்தியில் விமா்சனத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT