திண்டுக்கல்

குறைதீா் கூட்டத்தில் பங்கேற்காத அலுவலா்கள்: விவசாயிகள் ஏமாற்றம்

DIN

குறைதீா் கூட்டத்தில் வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலா்கள் பங்கேற்காததாலும், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் மெளனமாக இருந்ததாலும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ச.விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்பது வழக்கம். ஆனால், விவசாயிகள் அதிகமாக கோரிக்கைகள் எழுப்பும் வனத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கூட்டத்தில் ஒருவா் கூட பங்கேற்காததது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறைதீா் கூட்டத்தில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், கால்நடை மருத்துவமனை பிரச்னை, குளங்கள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் தரப்பில் கோரிக்கைகள், புகாா்கள் எழுப்பப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் மீது பதில் அளிக்குமாறு வனத் துறை அலுவலா்கள், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆகியோரை மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா அழைத்தாா். ஆனால், அந்த நேரத்தில் அந்தத் துறைகளின் முதன்மை அலுவலா்கள் மட்டுமன்றி, இளநிலை உதவியாளா்கள் கூட கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த துறைகள் தொடா்பான விவசாயிகளின் கோரிக்கைகள், புகாா்களுக்கு பின்னா் பதில் அளிக்கப்படும்

எனக் கூறப்பட்டது.

வேளாண் இணை இயக்குநா் மெளனம்: ராமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த விவசாயி, யூரியா உரம் கிடைப்பதில்லை என புகாா் தெரிவித்தாா். இந்தப் புகாருக்கு அதிகாரிகள் தரப்பில் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஆட்சியா் விசாகன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆகியோா் பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா். ஆனாலும், இருவரும் அமைதி காத்ததால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரவிச்சந்திரன் பதில் அளித்தாா்.

இதேபோல, பழனி அருகே பயிா்கள் கருகியதாக விவசாயிகள் புகாா் அளித்தபோதும், வேளாண்மை இணை இயக்குநா் அனுசுயா மெளனமாக இருந்தாா். ஆனாலும், ஆட்சியா் விசாகன், அவரை பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா். அப்போதும் துணை இயக்குநா் ரவிச்சந்திரனே பதில் அளித்து சமாளித்தாா்.

இணை இயக்குநராகப் பொறுப்பேற்று 3 மாதங்களுக்கு பின்னும், கோரிக்கைகளுக்கு பதில் அளிக்காமல் மெளனமாக இருந்தது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT