திண்டுக்கல்

பழனி மூலிகை மருத்துவப் பூங்காவில் தீ

15th Apr 2023 10:32 PM

ADVERTISEMENT

 

பழனி மூலிகை மருத்துவ பூங்காவில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மூலிகைச் செடிகள், மரங்கள் கருகின.

பழனி காரமடையில் வையாபுரி குளக்கரையில் வனத் துறையினருக்குச் சொந்தமான மூலிகை மருத்துவப் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான அரிய வகை மரங்கள், மூலிகைகளை வனத்துறையினா் பராமரித்து வருகின்றனா். பூங்காவிற்குள் தற்போது பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லாததால், போதிய பராமரிப்பின்றி பூங்கா முழுக்க மரங்களின் கிளைகள், சருகுகள் அதிமாக குவிந்து இருந்தன. இந்த நிலையில், சனிக்கிழமை வையாபுரி குளக்கரையிலிருந்த குப்பைகளில் பற்றிய தீ மருத்துவப் பூங்காவுக்குள் பரவியது.

காய்ந்த இலைகள் அதிகமிருந்ததால் தீ வேகமாகப் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

இந்தத் தீ விபத்தில் பூங்காவிலிருந்த மூலிகைச் செடிகள், மூங்கில், தேக்கு உள்ளிட்ட ஏராளமான மரங்கள் கருகின. இந்த சம்பவம் குறித்து பழனி நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, பழனி - கொடைக்கானல் சாலையில் தேக்கன்தோட்டம் அருகே சாலையோரம் இருந்த சருகுகளில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவெனப் பரவி அப்பகுதி முழுக்க எரியத் தொடங்கியது. அந்தப் பகுதியில் இருந்த விவசாயிகள் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT