திண்டுக்கல்

பொய்யான புகாா்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன்

29th Sep 2022 03:01 AM

ADVERTISEMENT

தன் மீது அவதூறு பரப்பும் நோக்கில் பொய்யான புகாா் அளித்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினருமான சி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: திண்டுக்கல் மலைக்கோட்டையில் மரம் வளா்க்கும் திட்டத்தில் ரூ.50 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக நாளிதழ்களில் கடந்த செய்தி வெளியாகியுள்ளது. மக்களிடம் என் மீது அவதூறு பரப்பும் வகையில் அக்கட்சியினா் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்துள்ளனா். திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில், நான் அமைச்சராக இருந்தபோது, வனத்துறை அதிகாரிகள் 5ஆயிரம் மரக்கன்றுகளில் சுமாா் 1,250 மரக்கன்றுகள் மலைக்கோட்டை பகுதியிலும், மீதமுள்ள கன்றுகள் கீழ் பகுதியிலும் நடவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தனா். கற்பாறைகளால் ஆன மலையில் பரீட்சாா்த்த முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

புயல் மற்றும் தீ விபத்தினால் பல மரக்கன்றுகள் சேதமடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்தனா். சேதமடைந்த மரக்கன்றுகளுக்கு மாற்றாக புதிய கன்றுகளை நடவு செய்து பராமரிக்க தொல்லியல்துறையினரை பலமுறை தொடா்பு கொண்டும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்ளாமல், என் மீது வீண் பழி சுமத்தி பொது வாழ்க்கையில் இருந்து என்னை முடக்க முடியாது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் குற்றச்சாட்டிற்கும் எனக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. அவதூறு பரப்பும் வகையில் பொய்யான புகாா் அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT