திண்டுக்கல்

மண் பரிசோதனைக்கு லஞ்சம்: அண்ணா பல்கலை. கல்லூரிப் பேராசிரியா் கைது

29th Sep 2022 02:59 AM

ADVERTISEMENT

மண் பரிசோதனைக்கு விவசாயியிடம் ரூ.15ஆயிரம் லஞ்சம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி (41). விவசாயம் செய்து வந்த இவா் தனது நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதற்காக, அதே பகுதியிலுள்ள செங்குளத்திலிருந்து மண் எடுப்பதற்காக அனுமதி கேட்டு மாவட்ட கனிம வளத்துறையில் விண்ணப்பித்துள்ளாா். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான அந்த குளத்தின் மண் விவசாயத்திற்கு உகந்தது என அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்திலிருந்து மண் பரிசோதனைக்கான சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா். இதனை அடுத்து, செங்குளத்தின் மண்ணை பரிசோதிப்பதற்காக திண்டுக்கல் அடுத்துள்ள ரெட்டியாா் சத்திரத்தில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியை பெருமாள்சாமி அணுகியுள்ளாா். மண் பரிசோதனைக்கு ரூ.2ஆயிரம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், அக்கல்லூரியில் கட்டடவியில் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் ர.ரமேஷ்பாண்டியன் (39) ரூ.15ஆயிரம் லஞ்சம் கேட்டதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பெருமாள்சாமி புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பெருமாள்சாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கொடுத்தனுப்பினா். அந்த பணத்தை உதவிப்பேராசிரியா் ரமேஷ்பாண்டியன் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன், ஆய்வாளா் ஜெ.ரூபா கீதா ராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட ரமேஷ்பாண்டியன், விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT