திண்டுக்கல்

பழனியில் நிறுவன உரிமையாளா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

29th Sep 2022 02:57 AM

ADVERTISEMENT

பழனி நேதாஜி நகரில் தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து 30 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனா்.

பழனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள நேதாஜி நகரில் வசிப்பவா் ரங்கநாதன். தனியாா் நிறுவனம் நடத்தி வரும் இவா், கா்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்று வரும் தசரா விழாவைக் காண்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன் குடும்பத்தினருடன் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் பழனி நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் வந்து ஆய்வு மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனா். சம்பவம் குறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடரும் திருட்டு:பழனியில் கடந்த வாரம் 3 வீடுகளில் கொள்ளை நடந்திருந்த நிலையில் மீண்டும் திருட்டு நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நகா் மற்றும் புகா் பகுதியில் ரோந்துப்பணியை போலீஸாா் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT