திண்டுக்கல்

பழனி கோயிலில் நவராத்திரி விழா: காப்புக் கட்டுதலுடன் தொடக்கம்

26th Sep 2022 10:58 PM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

முன்னதாக காலையில் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி, கைலாசநாதா், பெரியநாயகியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்புக் கட்டப்பட்டது. பின்னா் மலைக்கோயிலில் உச்சிக்காலத்தின் போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து மூலஸ்தானத்தில் உள்ள விநாயகா், மூலவா், உற்சவா், வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா் ஆகியோருக்கும், பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகா், கொடிக்கம்பம், மயில் வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது. நவவீரா்கள், பரிவார மூா்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மலைக்கோயிலில் உள்ள போகா் சந்நிதியில் பழனி போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிக்கு கோயில் சாா்பில் மரியாதை செய்யப்பட்ட பின், புவனேஸ்வரி அம்மன் புறப்பாடாகி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்துக்கு எழுந்தருளினாா். மலைக்கோயிலில் வரும் அக். 3 ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், அக். 4 ஆம் தேதி விஜயதசமி அம்புவில் போடுதலும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

விழா நாள்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. விழாவையொட்டி வரும் அக். 4 ஆம் தேதி வரையிலும் 9 நாள்களுக்கு தங்கத் தோ் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காப்புக்கட்டு விழாவில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், கண்காணிப்பாளா் முருகன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT