திண்டுக்கல்

பழனியில் நாளை நவராத்திரி விழா தொடக்கம்9 நாள்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு நிறுத்தம்

25th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (செப்.26) நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி 9 நாள்களுக்கு கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி திங்கள்கிழமை பிற்பகல் உச்சிக்காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள், காப்புக்கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு செப்.26 ஆம் தேதிமுதல் அக்.4 ஆம் தேதிவரை 9 நாள்களுக்கு மலைக்கோயிலில் தங்கரதப் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

விழா நாட்களில் பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. தவிர, நவராத்திரி நாள்கள் முழுவதும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துகுமாரசுவாமி பல்வேறு அலங்காரத்தில் கொழு அலங்காரம் செய்யப்படவுள்ளாா்.

பழனி மலைக்கோயிலில் அக்.3 ஆம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், அக்.4 ஆம் தேதி விஜயதசமி அம்புவில் போடுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அக்.4 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு 2.45 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடு நடைபெறும். பின்னா் மலைக்கோயில் காப்பிடப்படும். மலைக்கோயிலில் சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு முத்துகுமாரசாமி, பெருமாள் சகிதம் கோதைமங்கலம் கோதீஸ்வரா் கோயிலில் அம்புவில் போடுதல் நடைபெறுகிறது. சம்ஹாரம் முடிந்தபின்னா் வேல் மலைக்கு வந்தபிறகு சம்ரோட்சணம் செய்யப்பட்டு அா்த்தஜாமபூஜை நடத்தப்படும்.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT