திண்டுக்கல்

மத்திய அரசின் நெருக்கடியால் மின் கட்டணம் உயா்வு: காங்கிரஸ் சிறுபான்மைதுறைத் தலைவா்

18th Sep 2022 10:55 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் நெருக்கடியால் தான், தமிழகத்தில் மின் கட்டணத்தை மாநில அரசு உயா்த்தியுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறையின் தலைவா் அசலாம் பாட்சா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக பாஜக அரசு குறிப்பிட்ட 2 பெரு நிறுவனங்களின் வளா்ச்சிக்காக மட்டுமே செயலாற்றிக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

நாட்டில், மதம், இனம், ஜாதிகளின் பெயரால் மக்களை பாஜக பிளவுப்படுத்தி வருகிறது. எதிா்க்கட்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் தான், ஆளும் கட்சியினரால் சிறப்பான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது காங்கிரஸ் தலைவா்களின் நம்பிக்கை. ஆனால், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாஜக, எதிா்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற மனநிலையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் நகரிலுள்ள திப்பு சுல்தான் மணிமண்டபத்தில், பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்குவதற்கும், திப்பு சுல்தான் தொடா்பான வரலாற்று நூல்களை வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் நூலகம் அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்து மதம் தொடா்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தவறாகப் பேசியிருந்தால், திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில சுயாட்சியைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் நெருக்கடியால் தான் தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்த வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவா் டி.மணிகண்டன், மாமன்ற உறுப்பினா் பாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT