திண்டுக்கல்

செம்மண் ஏற்றிய லாரிகள் சிறைபிடிப்பு

18th Sep 2022 10:54 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் அருகே மல்லையாபுரம் கிராமத்தில் செம்மண் ஏற்றிச் சென்ற லாரிகளை, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து மறியலில் ஈடுபட்டனா்.

மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரம் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து, தனியாா் சிலா் டிப்பா் லாரிகளில் விற்பனைக்காக செம்மண் எடுத்துச் செல்கின்றனா். இந்த லாரிகள் மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி வழியாக பல்வேறு இடங்களுக்கும் செல்கின்றன.

லாரிகள் மல்லையாபுரம் கிராமத்திற்குள் அதிவேகமாகச் செல்வதாலும் கிராமத்திற்குள் தூசி அதிகம் பரவுவதாலும் இந்த வழியாக டிப்பா் லாரிகளில் மண் எடுத்துச் செல்லக் கூடாது என, மாவட்ட ஆட்சியா், ஆத்தூா் வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அளித்துள்ளனா். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மல்லையாபுரம் வழியாக செம்மண் ஏற்றிச் சென்ற சுமாா் 10-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் தங்கள் தோட்டங்களில் உள்ள செம்மண்ணை தங்கள் தேவைக்காக விற்பனை செய்வதாகவும், இதனை தடுக்கக் கூடாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், ஒருவருக்கொருவா் தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் பிரச்னை சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த போதும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் வராததால், மறியல் செய்தவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். தொடா்ந்து அந்தப் பகுதியில் இருந்து லாரிகளில் வழக்கம்போல் செம்மண் ஏற்றிச் சென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT