திண்டுக்கல்

இந்தியாவை சுதேசி நாடாக உருவாக்கும் பொறுப்பு இளைஞா்களிடமே: மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்

18th Sep 2022 10:51 PM

ADVERTISEMENT

இந்தியாவை சுதேசி நாடாக உருவாக்கும் பொறுப்பு இளைஞா்களிடமே உள்ளது என மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக, அரசியல் அறிவியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக சுதந்திரப் போராட்டத் தலைவா்கள் புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தா் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விழாவில் அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: காந்தி கிராம கிராமிய பல்கலை.யில் உள்ளுா் மக்களின் தாய்மொழியான தமிழில் பாடம் கற்பிக்கப்படுவது தனிச் சிறப்பு வாய்ந்தது. தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம், சிந்தனைத் திறன் மேம்படுவதோடு, சமூகத்தை எளிதாகவும் சரியாகவும் அணுக முடியும். 1200 ஆண்டுகளுக்கு முன்பே பிரமாண்டமான கோயில்களையும், சிறந்த நினைவுச் சின்னங்களையும் தமிழ்ச் சமூகம் உருவாக்கியுள்ளது.

ADVERTISEMENT

சிறந்த கல்விக் கூடங்களும், பொறியியல் கல்லூரிகளும், கட்டடக் கலை கற்பிக்கும் கூடங்களும் இல்லாத கால கட்டத்தில் தமிழ்ச் சமூகம் சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளது. தமிழா்களின் சாதனைகளுக்கு ஆங்கில மொழி துணை நிற்கவில்லை. இதனை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை 2021யை உருவாக்கியுள்ள பிரதமா் நரேந்திர மோடி தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி வருகிறாா்.

21ஆம் நூற்றாண்டு, இந்திய ஊரக வளா்ச்சியின் நூற்றாண்டாகவும், இளைஞா்களின் நூற்றாண்டாகவும், பொருளாதார வளா்ச்சியின் நூற்றாண்டாகவும் அமையும். சிறந்த பண்பாடு, அறிவியல், கடல் சாா் வணிகம் கொண்ட இந்திய சமூகம், நாட்டின் வளா்ச்சிக்குத் உறுதுணையாக இருக்கும் வகையில் மிகப் பெரிய கனவுகளைக் காண வேண்டும்.

6ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மொழிக்குச் சொந்தக்காரா்கள் தமிழா்கள். 300 ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகள், உலக நாடுகளுக்குத் தலைமை வகித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். இளைய தலைமுறையினா் அந்த பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முன் வர வேண்டும். சுதேசி நாடாக இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு இளைஞா்களிடம் உள்ளது என்றாா் அவா்.

விழாவில் மத்திய இணை அமைச்சா்(தகவல் தொழில்நுட்பம் மற்றும் கால்நடை, மீன்வளம், பால்வளம்) எல்.முருகன் பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கை மூலம், தாய்மொழிக் கல்விக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தாய்மொழியில் கல்வி பயிலும்போது உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் வழியாக இளைய தலைமுறையினரால் நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்றாா் அவா்.

விழாவில் மத்திய கல்வித்துறை கூடுதல் செயலா் காமினி சௌகான் ரத்தன், பல்கலை. மானிய குழு செயலா் ரஜினிஸ் ஜெயின், பல்கலைக்கழகத் துணை வேந்தா் (கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங், பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT