திண்டுக்கல்

பாலங்கள் அமைக்கும் பணி: கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல்

10th Sep 2022 10:44 PM

ADVERTISEMENT

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையில் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் பனிக்கரை, வாழைகிரி, மயிலாடும் பாறை, மச்சூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10-சிறிய பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி தொடங்கி பல மாதங்களான நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் மலைச்சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்கள், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களால் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.

இந்நிலையில் கேரளத்தில் ஓணம் பண்டிகை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களில் கொடைக்கானலுக்கு சனிக்கிழமை வந்தனா். பாலம் அமைக்கும் பணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் சவரிக்காடு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கொடைக்கானல் வருவதற்கு வத்தலகுண்டு மலைச்சாலையை வாகன ஓட்டுநா்கள் பயன்படுத்திவரும் நிலையில், தற்போது தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வாகனங்களும் வருவதால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினா் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT