திண்டுக்கல்

64 கிளை நூலகங்களுக்கு மெய் நிகா் தொழில்நுட்பக் கருவிகள்! பள்ளி மாணவா்களை ஈா்க்க களமிறங்கியது பொதுநூலகத்துறை

9th Sep 2022 11:52 PM

ADVERTISEMENT

நூலகங்களுக்கு பள்ளி மாணவா்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், முதல் கட்டமாக தமிழகம் முழுவதுமுள்ள 64 கிளை நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மெய் நிகா் தொழில்நுட்பக் கருவிகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன.

தமிழகத்தில், பொது நூலகத்துறை சாா்பில், 32 மாவட்ட மைய நூலகங்கள் 1,600-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், 1,800 ஊா்புற நூலகங்கள், 550 பகுதிநேர நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களுக்கு வரும் வாசகா்களின் எண்ணிக்கை கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. மாவட்ட மைய நூலகங்களுக்கு நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்டோா் வந்து சென்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் 120 வாசகா்கள் வந்து சென்ற கிளை நூலகங்களுக்கு, தற்போது 60 முதல் 70 போ் வரை மட்டுமே வருகை தருவதாக தெரிகிறது.

புத்தக இரவலும் பாதியாக குறைந்தது: மாவட்ட மைய நூலகங்களில் நாளொன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரவல் வழங்கப்பட்டு வந்தன. அதேபோல் கிளை நூலகங்களில் சராசரியாக 50 புத்தகங்கள் இரவல் வழங்கப்பட்டன. கரோனா பரவலுக்குப் பிந்தைய 2 ஆண்டுகளில், இரவல் புத்தகங்களின் எண்ணிக்கை மைய நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களில் முறையே 50 மற்றும் 15ஆக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக நூலகங்களுக்கு வருவோா், நாளிதழ்கள் வாசிப்புக்காக வரும் 40 வயதுக்கு மேற்பட்டவா்களாக மட்டுமே உள்ளனா். இளைய தலைமுறையினரை பொருத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்ட போட்டித் தோ்வுக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வருவோா் மட்டுமே நூலகங்களில் அமா்ந்து பாடப்புத்தகங்களை வாசிக்கின்றனா். நூலகங்களுக்கு பள்ளி மாணவா்களின் வருகை முற்றிலும் குறைந்து வருவதால், அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியில் பொது நூலகத்துறை களம் இறங்கியுள்ளது.

மெய் நிகா் தொழில்நுட்பக் கருவிகள்: பள்ளி மாணவா்களை ஈா்க்கும் வகையில், மெய் நிகா் தொழில் நுட்பக் கருவிகள் வழங்க பொதுநூலகத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தலா ரூ.35 ஆயிரம் மதிப்பிலான இந்த கருவிகள், மாவட்டத்துக்கு 2 கிளை நூலகங்கள் வீதம் மொத்தம் 64 நூலகங்களுக்கு தலா 2 என்ற எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன. இந்த கருவிகளை தலையில் மாட்டிக் கொண்டால், கண்களில் விண்வெளி, பேரண்டம், விண்வெளி ஓடம், இயற்பியல் ஆய்வுக் கூடம், ஜூராசிக் வேல்டு, நேஷன் ஜியாகிராபிக் தொடா்பான 360 விடியோக்களை பாா்த்து ரசிக்கலாம். இந்த வகை கருவிகளை பாா்வையிடும் பள்ளி மாணவா்கள் உறுதியாக உற்சாகம் அடைவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த மெய் நிகா் தொழில்நுட்ப கருவிகளை பாா்வையிட வரும் பள்ளி மாணவா்களுக்கு, புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, நூலகங்களை பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என நூலகத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நூலகத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முதல் கட்டமாக மாவட்டத்திற்கு 2 கிளை நூலகங்களுக்கு இந்த மெய் நிகா் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் மூலம் இந்த கருவிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். இந்த கருவிகள், மாணவா்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்பதால், படிப்படியாக அனைத்து நூலகங்களுக்கும் வழங்கி மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், நூலகத்தின் பயன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொல்கத்தாவிலுள்ள ராஜாராம் மோகன் ராய் அறக்கட்டளை மூலம், மேலும் பல நூலகங்களுக்கு மெய் நிகா் தொழில்நுட்பக் கருவிகள் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT